பிரம்மஞான ஸ்வரூபம்

எல்லா சாஸ்திரங்களும் முடிவில் ஞானம் அடைவதைத்தான் லட்சியமாக சொல்கின்றன. ‘ஞானம்’ என்றால் எதை அறிவது? தன்னையே அறிவதுதான் ஞானம். தன்னை அறிகிறபடி அறிந்து விடுகிறபோது, அந்த தானுக்கு வேறாக எதுவுமே இராது. சகலமும் அதற்குள் அடக்கம். ஆத்மஞானமே எல்லாவற்றையும் அறிகிற ஞானமாகிறது. நம் சரீரம், இந்திரியங்கள், மனசு எல்லாம் போன பிறகும் மாறாமல் நிற்கிற சத்தியமாக இருப்பது இந்த ஆத்மா.

மற்றதெல்லாம் மாறினாலும் இது மாறாமலே உள்ளபடி இருந்து கொண்டிருப்பதால் இதற்கு ‘ஸத் ‘ என்று பெயர். இந்த ‘ஸத் ‘ வெறுமே இருந்து பிரயோஜனம் இல்லை. தான் ஸத்தாக இருக்கிறேன் என்கிற அறிவு-ஞானம்-அனுபவம்- அதற்கு இருந்தால்தான் ஆனந்தம் உண்டாகிறது.இப்படி தன்னையே தான் அறிந்து கொள்கிறபோது ‘ஸத்தா’னது ‘சித்’ எனப்படும்.ஸத் என்கிற உண்மையை பிரம்மம் என்றும் பரமேஸ்வரன் என்றும், சித் என்கிற அதன் அறிவை பராசக்தி என்றும் அம்பாள் என்றும் சொல்கிறோம்.

பிரம்ம ஞான ஸ்வரூபமாக இருக்கிற அவனை உபாசித்தாலே, அவளுடைய அனுக்கிரகத்தால்  நாமும் அந்த ஸத்துத்தான் என்கிற ஞானத்தை அடைய முடியும். எப்போது பார்த்தாலும் சலித்துக் கொண்டும், மாறிக்கொண்டும், அழிந்து கொண்டும் இருக்கிற ஏதோ ஒன்றாக நம்மை எண்ணி  வருகிறோமே உண்மையில் அது அல்ல; நாம். எப்போதும் மாறாமல் இருக்கிற சத்தியமே நாம் என்கிற ஞானம் அனுபவபூர்வமாக உண்டாகி, அதில் ஏற்படுகிற ஆனந்தமே மோக்ஷம்.

அவள் அனுக்கிரகத்தால்தான் ஜன்ம விடுதலையாகி மோக்ஷம் அடையலாம். அம்பாளை ஆறாதிப்பதால் ஞானம் ஆவிர்பாகமாகி அக்ஞானம் விலகி , மோக்ஷம் கிடைக்கிறது.

இகலோகத்தில் பல விதமான சௌக்கியங்களை அனுக்கிரகம் செய்கிற அம்பாள், முடிந்த முடிவாக இந்த ஞானத்தை, மோக்ஷத்தை அருளுகிறாள்.

பிரம்மஞானஸ்வரூபமாக இருக்கிற அம்பாளின் அனுக்கிரகத்தால் அனைவர்க்கும் அருள் உண்டாகும்.



Categories: Upanyasam

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading