காஞ்சி மகா ஸ்வாமிகள்


லயங்களில்… வசதி வாய்ப்புள்ள பலர், தங்க ஆபரணங்கள், வைர நகைகள் என்றெல்லாம் வாங்கி தெய்வத் திருமேனிகளுக்கு கொடுத்திருந்தாலும், அவை அத்தனையும் – எல்லா நேரங்களிலுமா அந்தத் தெய்வத் திருமேனிகளை அலங்கரிக்கின்றன? இல்லையே!விசேஷம், முக்கிய தினங்கள், விழாக் காலங்கள் என்று நாள்- நட்சத்திரம் பார்த்துதானே இந்த நகைகளை அணிவிக்கின்றனர்? ‘இன்று தங்க கவசம்’ – ‘இன்று வைர அங்கி சேவை’ என குறிப்பிட்ட நாளில் ஆலயத்தில் அறிவிப்பார்கள். இறைவனுக்கு தங்க ஆபரணங்களையும் வைர நகைகளையும் வாங்கிக் கொடுக்கும் வசதி, எல்லா பக்தர்களுக்கும் இருக்குமா என்ன? இதற்காகத்தான் சொன்னார்கள் – பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைக்க வேண்டும் என்று! ஆம்! பொன் வாங்கித் தர இயலாதவர்கள், தெய்வத் திருமேனியை அழகு செய்து பார்க்க பூ வாங்கித் தருவார்கள். இதுவும் ஓர் அழகுதான்.தெய்வத் திருமேனியில் சார்த்துவதற்கென்று- ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு முழம் பூவை உள்ளன்புடன் வாங்கிக் கொடுங்கள்… அது அன்று முழுதும், இறைவனின் திருமேனியை அலங்கரிக்கும்; சந்நிதியை நிறைக்கும். பூமாலையை விட பொன் ஆபரணங்கள் விலையில் பன்மடங்கு உயர்ந்திருந்தாலும், அதிக நேரம் தெய்வத் திருவுருவத்தைத் தழுவும் பாக்கியம், பூமாலைக்குத்தான் உண்டு. கிட்டத்தட்ட இதுபோன்ற காட்சியை, காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் கண்டனர் பக்தர்கள்.

அதாவது மகா பெரியவாளை தரிசித்து அவரின் அருள் பெறுவதற்காக ஏராளமானோர் பெருங்கூட்டமாக திரள்வர். பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கத்தை கத்தையாக கரன்ஸிகளை அடுக்கிக் கொண்டும், மடிப்பு கலையாத சுத்தமான பட்டு வஸ்திரங்களை வைத்துக் கொண்டும், தங்க ஆபரணங்களை அட்டைப் பெட்டியில் அடைத்துக் கொண்டும், பழங்கள்- முந்திரிகள்- திராட்சைகள் என்று பழ வகைகளை உயர்தர ‘பேக்கிங்’கில் வாங்கிக் கொண்டு வந்து, தங்கச் சங்கிலி பளபளக்க… திறந்த மேனியுடன் – பெரியவாள் தரிசனத்துக்காக வரிசையில் காத்துக் கொண்டிருப்பார்கள். தங்கள் முறை வந்ததும், தாங்கள் கொண்டு வந்த பொருட்களை, பெரியவா காலடியில் சமர்ப்பிப்பார்கள்.

அதே நேரம், கூட்டத்தில் எங்கேனும் ஒரு மூலையில்… வரிசையில் நிற்கக்கூட தெம்பு இல்லாமல், வயதான ஒரு மூதாட்டி சிறிய கல்கண்டு பொட்டலத்தை வைத்துக் கொண்டு, ‘இதைப் பெரியவா கையில் எப்படியாவது சேர்க்க வேண்டுமே?’ என்று தவித்து மருகுவார். அந்த கல்கண்டு, தெருமுனையில் உள்ள செட்டியார் கடையில் அரையணா கொடுத்து வாங்கப்பட்டிருந்தாலும் மூதாட் டியின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் தூய பக்தி, விலைமதிப்பற்றது அல்லவா? பெரியவா இருக்கும் இடத்தின் அருகே அந்த மூதாட்டி நெருங்க முயன்றாலும், சிலரால் தடுக்கப்படுவார்.

உலகின் சகல இயக்கங்களையும் இருந்த இடத்தில் இருந்தே அறியும் ஆற்றல் பெற்ற காஞ்சி மகா ஸ்வாமிகள், இதை அறியாமல் இருப்பாரா?

மூதாட்டியின் தவிப்பை பெரியவா உணர்ந்து விடுவார். தன் உதவியாளர் ஒருவரிடம் அடையாளம் சொல்லி, அந்த மூதாட்டியைக் கைத் தாங்கலாகத் தன்னிடம் அழைத்து வருமாறு உத்தரவிடுவார். உதவியாளர் ஓடிச் சென்று, மூதாட்டியிடம் விவரம் சொல்லி, அவரது கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு, பெரியவாளை நோக்கி நடந்து வருவார். அந்த நிமிடத்தில் மூதாட்டியின் முகத்தில் மலரும் பரவசம் இருக்கிறதே… ஆஹா! இதுதானே ஆனந்தம்!

இதனால்தான் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொன்னார்: ‘பொன் பொருள்தான் என்றில்லை… தூய பக்தியுடன் ஏதேனும் ஓர் இலையை எனக்குச் சமர்ப்ப ணம் செய். அதுவும் இயலவில்லையா? கண்ணீர் மல்க நீ செய்யும் பிரார்த்தனை ஒன்றே போதும்!’

ஆம்! இறைவனின் அருளைப் பெற கள்ளமில்லா மனமும் தூய பக்தியும் போதும். மகா பெரியவாளிடமும் இப்படி பக்தி செலுத்தி அவரின் திருவருளைப் பெற்ற வர்கள் ஏராளம்!

ஒரு முறை காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில், மேடையில் அமர்ந்து பக்தர்களிடையே அருளுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது ஆடு ஒன்று, வாசலைக் கடந்து மடத்தின் உள்ளேயே வந்து விட்டது. பெரியவா அமர்ந்திருந்த மேடைக்கு அருகே வந்து நின்று, ஸ்வாமிகளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் எழுந்து, விறுவிறுவென சென்று ‘ச்சூ… ச்சூ!’ என்று அந்த ஆட்டை அங்கிருந்து விரட்ட முற்பட்டனர்.இதைக் கவனித்த ஸ்வாமிகள் உரையை சற்று நிறுத்தி விட்டு, ஆட்டை விரட்ட முயன்ற பக்தர்களைத் தடுத்தார். ”அதை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். அதுக்குப் பசிக்குது. ஏதாவது தேவையா இருக்கும்” என்றவர், தனக்கு முன்னால் பித்தளைத் தட்டில் இருந்த வாழைப்பழங்கள் சிலவற்றை எடுத்து, ஆட்டின் முன் நீட்டினார். அந்த ஆடு உற்சாகத்துடன் ஸ்வாமிகளுக்கு அருகே வந்து, ஒவ்வொரு பழமாக வாங்கிச் சாப்பிட்டது. சில விநாடிகளுக்குப் பிறகு, அங்கிருந்து வெளியேறியது.

பிறகு ஸ்வாமிகள், ”இப்ப ஆடு ரூபத்துல வந்துட்டுப் போனது தபோவனம் ஸ்ரீஞானானந்த கிரி ஸ்வாமிகள். தபோவனத்துல உட்கார்ந்துண்டிருக்கிற அவருக்கு என்னவோ ஒரு பசி… என்கிட்டேர்ந்து ஏதாவது வாங்கிச் சாப்பிடணும்னு தோணி இருக்கு. அதான் நேரா
இங்கே வந்துட்டார். நான் வாழைப்பழங்களைக் கொடுத்ததும், அதைச் சாப்பிட்டுட்டு சாந்தமா புறப்பட்டுப் போயிட்டார்” என்று சொல்ல… பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்!

தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத அந்த காலகட்டத்தில்… பல மைல் தொலைவுக்கு அப்பால் இருந்தாலும்… நேருக்கு நேர் சந்திக்காமலேயே தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் மகான்கள் பரிமாறிக் கொள்வர் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம் தபோவனம் மகானின் பசியை காஞ்சி ஸ்வாமிகள் தீர்த்தார். இதேபோல் ஸ்வாமிகளுக்கே ஆகாரம் அளித்தார் மகான் ஒருவர். என்ன, ஆச்சரியமாக இருக்கிறதா?

ஒரு முறை ஸ்வாமிகளுக்கு உடல்நலக் குறைவு. காஞ்சிபுரத்தில் ஓய்வில் இருந்தார் ஸ்வாமிகள். இரண்டு மூன்று நாட்களாக ஆகாரம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. அப்போது திருவண்ணாமலையில் உள்ள யோகி ராம்சுரத்குமார், மகா பெரியவாளின் நிலையை, தன் மனக் கண்ணால் அறிந்தார். ‘இப்பேர்ப்பட்ட மகான் ஆகாரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கலாமா?’ என்று சிந்தித்தவர், அருகில் இருந்த பக்தர் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வரும்படி சொன்னார்.

உடனே அந்த பக்தர், ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வந்து, யோகியின் கையில் உள்ள தேங்காய் சிரட்டையில் வைத்தார். ஆரஞ்சு சுளைகளை ஒவ்வொன்றாக எடுத்து, மிகுந்த ரசனையுடன் நிதானமாக உட்கொள்ளத் துவங்கினார் யோகி. திருவண்ணாமலையில் இருந்தபடி ஒவ்வொரு சுளையாக யோகியார் சாப்பிட சாப்பிட… காஞ்சிபுரத்தில் இருந்த மகா பெரியவாளின் வயிறு நிரம்பியது; மனம் குதூகலித்தது; சோர்வு நீங்கியது. முழு ஆரஞ்சுப் பழத்தை யோகி சாப்பிட்டு முடித்த வேளை யில், மகா பெரியவாள் எழுந்து உட்கார்ந்து கொண்டார். அவரின் முகம், வழக்கத்தை விட கூடுதல் பொலிவுடன் இருப்பதைக் கண்டு மடத்து ஊழியர்கள் அதிசயித்தனர். மடத்து மேனேஜரைக் கூப்பிட்டார்; உதவியாளர்களை வரச் சொன்னார்; இயல்பு வாழ்க்கையில் ஈடுபடத் துவங்கினார் மகா பெரியவா.

ஜகத்குரு, நடமாடும் தெய்வம், மகா பெரியவா, பெரியவா, மகா ஸ்வாமிகள், கலியுக தெய்வம், கண்கண்ட கடவுள், கருணைக் கடல் என்று பலராலும் பல பெயர்களால் அழைக்கப்படுபவர் – காஞ்சி காமகோடி மடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். பொதுவாக பலருக்கும் இவர் ‘பெரியவா’. குழந்தைகளுக்கு ‘உம்மாச்சி தாத்தா’.

மகா ஸ்வாமிகளின் இயற்பெயர்- சுவாமிநாதன். கி.பி. 1894-ஆம் வருடம் மே மாதம் 2–ஆம் தேதி (ஜய வருடம் வைகாசி மாதம் 8-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நட்சத்திரத்தில் சுப்ரமண்ய சாஸ்திரிகள்-மகாலட்சுமி அம்மையார் தம்பதியின் திருமகனாக அவதரித்தார் மகா ஸ்வாமிகள். அவதரித்த இடம் : விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரம்!

தன் சீடர்கள் மற்றும் பக்தர்களால் சிவ சொரூபமாகவே வணங்கப்பட்டவர் மகா ஸ்வாமிகள். ‘சாட்சாத் சிவபெருமானின் அம்சம் இவர்’ என்று போற்றப்பட்டவர். இந்தக் கலியுகத்தில் நடமாடும் தெய்வமாக வாழ்ந்த பெரியவாளை தரிசித்தவர்கள் பாக்கியசாலிகளே!

மகா பெரியவரை, குலதெய்வமாகவே போற்றி வணங் கும் குடும்பங்களும் இருக்கின்றன. பெரியவா இருந்த போது, காஞ்சிக்குச் சென்று அவரது ஆசி பெற்று, தங்கள் குடும்ப வைபவங்களை சிறப்புறச் செய்து வந்தனர். இப்போதும், தங்கள் குடும்பங்களில் ஏதேனும் சுப நிகழ்வு என்றால், சொந்தங்கள் சூழ காஞ்சிக்கு வந்து, மகானது அதிஷ்டானத்தின் முன்னே நின்று பிரார்த்தனை செய்து விட்டுத்தான் சுப காரியத்தைத் துவக்குகின்றனர்.

நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்த அந்த மகானின் திவ்ய தேகம், அங்கே பூரணமாக உறைந்திருக்கிறது. வழிபாடுகளும், பாராயணமும் ஸ்வாமிகளுக்கு தினமும் நடைபெறுகிறது.

கோடிக்கணக்கான சொத்துகளைக் கொண்ட உயர்ந்த தொரு பீடத்தின் மடாதிபதி என்கிற எந்த டாம்பீகமும் இல்லாதவர் மகா ஸ்வாமிகள். தவிர, பக்தர்களிடம் பாகுபாடு காட்டாதவர்! மிகுந்த வறுமையான நிலையில் உள்ள பக்தர் தன்னிடம் வந்தால், அவருக்கு உணவிடும்படி மடத்து ஊழியர்களிடம் சொல்லுவார்; அவருக்கு வஸ்திரங்களும் வழங்குவார்.

இவரை தரிசிக்க இயலாதவர்கள் கூட, ‘மகா ஸ்வாமிகள் எப்படி இருப்பார்?’ என்று கேட்க மாட்டார் கள். ஏனெனில், இவரின் திவ்யமான திருவடிவம் அனைவரின் நெஞ்சங்களில் பதிந்து விட்ட ஒன்று!

காவி வஸ்திரம் போர்த்திய கெச்சலான உடல்; தேகமெங்கும் துலங்கும் விபூதிக் கீற்று; கழுத்தில் தவழும் ருத்திராட்ச மாலைகள். எதிரில் இருப்பவரின் எண்ண ஓட்டத்தை, தன் பார்வையாலேயே அளந்து அறியும் தீட்சண்யமான கண்கள்! தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்க்ருதம், இந்தி, மராட்டி, ஜெர்மன், பார்ஸி உள்ளிட்ட பதினான்கு மொழிகளில் ஸ்வாமிகளுக்குப் பரிச்சயம் உண்டு. புராணம், இதிகாசம், உபநிஷதம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்.

மடத்தில் இருந்து யாத்திரை செல்லும் காலங்களில், தண்டத்தைக் கையில் ஏந்தியபடி சாலையில் இறங்கி இவர் நடக்க ஆரம்பித்தால், பின்னால் வரும் சீடர்களும், பக்தர்களும் ஓடித்தான் வர வேண்டும். நடையில் அப்படியரு வேகம்! தேகத்தில் காணப்படும் சுருக்கங்களுக்கும், ஓடியாடும் சுறுசுறுப்புக்கும் சம்பந்தமே இருக்காது.

இவரது நினைவாற்றல் பிரமிக்கத்தக்க ஒன்று! பக்தரை ஒரு முறை பார்த்து விட்டால் போதும்… பிறகு பல வருடங்கள் கழித்து சந்திக்க நேர்ந்தாலும், அந்த பக்தரது பெயர்- பெற்றோர்- கோத்திரம் என்று அவரின் ஜாதகத்தையே சொல்லி, திகைக்க வைப்பார் ஸ்வாமிகள்!

கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் எவரேனும் ஸ்ரீமடத்தை அணுகினால், அவருக்கு ஏதேனும் உதவியைச் செய்வது ஸ்வாமிகளின் வழக்கம். உபநயனம், கல்வி, திருமணம் முதலான விசேஷங்களுக்கு மகா ஸ்வாமிகளை அணுகி, அவரிடம் இருந்து உதவியையும் அவரது ஆசியையும் பெற்றவர்கள் ஏராளம்.

தூக்கம் வந்து விட்டால், உட்கார்ந்திருந்த இடத்தில் அப்படியே படுத்து விடுவார் ஸ்வாமிகள். அது மரத்தடியோ, மணல்மேடோ, புல்தரையோ… எல்லா இடமும் ஸ்வாமிகளுக்கு ஒன்றுதான்! சுமார் இரண்டு மணி நேரம்தான் படுத்திருப்பார். அதன் பின் அவருக்கு விழிப்பு வந்து விடும்.

சென்னையில், ஸ்வாமிகள் தங்கி இருந்தபோது, ஓர் இடத்தில் இருந்து அடுத்துள்ள இடத்துக்கு முகாமை மாற்றுவதற்கு, கால நேரம் எதுவும் பார்க்க மாட்டார். அதிகாலையோ… நள்ளிரவு நேரமோ… மனதுக்குத் தோன்றியதும் உடனே யாத்திரையைத் தொடங்கி விடு வார். தீப்பந்த வெளிச்சத்தில்… பக்த கோஷங்கள் முழங்க… சென்னைத் தெருக்களில் பொன்னிற மேனியராக வலம் வரும் ஸ்வாமிகளைக் கண்டு மெய்சிலிர்த்துப் போவார்கள் பக்தர்கள். ஒரு பகுதியில்… எந்தத் தெருவையும் புறக்கணிக்கமாட்டார். தரிசனம் தேடி வருபவர்களில் – குடிசை மக்களாகட்டும்… கோடீஸ்வரர் ஆகட்டும்… எல்லோருக்கும் தரிசனம் தந்து பிரசாதம் தருவார்.

தேசத்தின் பல பகுதிகளுக்கும் யாத்திரை மேற்கொண்டிருக்கிறார் ஸ்வாமிகள். காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான தலங்கள் பலவற்றையும் தரிசித்துள்ளார். ஆந்திரா, கேரளா, கர்நாடகம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீஹார், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் என்று இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறார்.

சென்னை நகரத்துக்கு விஜயம் செய்த இவர், சென்னையின் பல இடங்களுக்கும் நடந்தே யாத்திரை மேற்கொண்டார். வேறோர் இடத்துக்கு முகாம் மாறும் போது மேனாவையோ, ரிக்ஷாவையோ எதிர்பார்க்க மாட்டார். ‘மேனா (பல்லக்கு) தயாராக இருக்கிறது. கூண்டு வண்டி (ரிக்ஷா) காத்திருக்கிறது. பெரியவா அதில் அமர்ந்து வரணும்’ என்று பக்தர்கள் அன்புடன் வேண்டிக் கொண்டாலும், அதை ஏற்க மறுத்து விடுவார்.

1932-ஆம் வருடம் நவம்பர் மாதம் 17-ஆம் தேதி மயிலாப்பூரில் மகா ஸ்வாமிகள் திரளான பக்தர்களிடையே உரையாற்றினார். நீதித்துறை யினர், தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் முதலானோர் இதில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அப்போது மகா ஸ்வாமிகள் ஆற்றிய உரை, மிகவும் அர்த்தம் பொதிந்தது; ஆழ்ந்து கவனிக்கத் தக்கதும்கூட! அவர் தனது உரையில் கூறியதாவது: ”கிராமங்களில் வசிக்கிறவர்கள் இப்போது நகரங்களை நோக்கி இடம் பெயரத் தொடங்கி இருக்கிறார்கள். இத்தகைய கிராமவாசிகளில் சிலர் தங்களது கிராமத்து வீடுகளை விற்று விட்டு, அதில் இருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு நகரங்களில் வசதியாக வாழ்கின்றனர்.

நிலங்களை இப்படி விற்று விட்டு முதலில் நகரங்களுக்கு வந்தவர்கள் – பிராமணர்கள்தான்! அவர்களைப் பின்பற்றி கிராமத்தில் உள்ள மற்ற சமூகத்தவர்களும் தங்கள் நிலங்களை விற்கத் துவங்கினார்கள். கிராமங்களில் உள்ள பல வீடுகள், முறையான பராமரிப்பு இல்லாததால் இடிந்து போய், குட்டிச் சுவர்களாகக் காட்சி அளிக்கின்றன. சரி… நகரத்துக்கு வந்தாயிற்று… இங்கேயாவது நிம்மதியாக இருக்க முடிகிறதா? வாழ்க்கை அமைதியாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை.

காரணம்- தேவைக்கு அதிகமான பொருட்களை வாங்கி, ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஒரு பொருளை வாங்குவதற்கு முன் ‘இது நமக்குத் தேவைதானா? அவசியம்தானா?’ என்று எவரும் யோசிப்பதில்லை. ஆக, வீட்டில் சேர்ந்துள்ள பொருட்களின் எண்ணிக்கை நாளாவட்டத்தில் பெருகி விடுகிறது. இதனால், ஒரு கட்டத்தில் – குடி இருக்கும் வீட்டையே – அதாவது வசதிகள் அதிகம் இருக்கக் கூடிய இடமாகப் பார்த்து ஜாகையை மாற்ற வேண்டி உள்ளது.

நகரத்தில் எல்லாமே வேகமாக நடைபெற வேண்டி இருக்கிறது. இதனால் பணச் செலவும் அதிகம். இங்கு நிதானமும் பொறுமையும் இருப்பதில்லை. பொதுவாக, இத்தகைய பணப் பற்றாக்குறையைப் போக்க மூன்று விதமான யோசனைகள் எனக்குத் தோன்றுகின்றன.

முதல் யோசனை: பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பினருமே ஆடை விஷயத்தில் செலவழிக்கும் பணம் அதிகம். எனவே, முதல் தரத்தில் உள்ள ஆடைகளையும் விலை அதிகம் உள்ளவற்றையும் தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது யோசனை: காபி சாப்பிடு வதற்குப் பதிலாக கோதுமைக் கஞ்சியை சாப்பிடலாம்; அல்லது மோர் குடிக்கலாம்.

மூன்றாவது யோசனை: கல்யாணம் முதலான நிகழ்வுகளின்போது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து விட வேண்டும். வரதட்சணை வாங்கக் கூடாது. கிளப், பீச் என்று பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லும் நேரங்களை குறைத்துக் கொண்டு அந்த வேளையில் உங்களது நித்ய கர்மானுஷ் டங்களை செய்து முடிக்க வேண்டும்.”

சுமார் 77 வருடங்களுக்கு முன் மகா ஸ்வாமிகள் சொன்ன கருத்துக்கள் இன்றைய சமூகத்துக்கும் பொருந்தி வருவது கவனிக்கத் தக்க ஒன்று! எல்லா காலத்துக்கும் பொருந் துகிற பொக்கிஷ வரிகள் இவை!

புராதனம் மிக்க பழைமையான ஆலயங்களுக்குச் சென்று, அதன் மகிமைகளைப் பலரிடமும் சொல்லி, திருப்பணிகளை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினார் ஸ்வாமிகள். பள்ளிக்கூடம் போன்ற கலாசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்குக் கல்வியுடன் பக்தியையும் போதித்தார். தன்னை சந்திக்க வருபவர்களிடம் அன்பு, ஒற்றுமை, கூட்டுக் குடும்பம் – இவற்றின் அவசியம் குறித்து பல விஷயங்களை அறிவுறுத்துவார்.

சென்னைப் பல்கலைக்கழக நூலகத்துக்குச் சென்று, அங்குள்ள நூல்களை ஆர்வத்துடன் பார்த்தார். மியூஸியம் சென்று அங்குள்ள பொக்கிஷங்களைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்தார். ‘இது எனக்கு சம்பந்தம் இல்லை’ என்று எதையும் ஒதுக்க மாட்டார். சென்னை ஐ.சி.எஃப்-பில் உள்ள ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்குச் சென்று, ரயில்பெட்டிகள் தயாராகும் முறையை வியப்புடன் கவனித்தார். அங்குள்ள நவீன கருவிகளையும் அதன் செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். சென்னையில் உள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றில், செய்திகள் அச்சு வடிவம் பெறும் முறை குறித்து விவரம் கேட்டறிந்தார்.

எப்போது, எங்கு சென்றாலும் தன்னுடன் வரும் பக்தர்கள் மற்றும் மடத்து ஊழியர்களையும் நன்றாகவே கவனிப்பார் ஸ்வாமிகள்!

பெரியவாளுக்கு காபி குடிக்கும் வழக்கம் இல்லை. அதே நேரம் மடத்துக்கு வருகிற பக்தர்களுக்கு காபி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். தான் அதிகாலையில் கிளம்புவதாக இருந்தால், கிளம்பும் முன் தன் உதவியாளர்களிடம், ”எல்லாரும் காபி சாப்டாச்சோ? ஏன்னா சில பேருக்கு பெட்ரோல் போடலேன்னா வேலையே ஓடாது” என்று சொல்லி, பலமாகச் சிரிப்பாராம் ஸ்வாமிகள்.

பெரியவா தன் வாழ்நாளில் பணத்தைக் கையால் தொட்டதில்லை. ”அங்கே வெச்சுட்டுப் போ” என்று தரையைக் காண்பிப்பார். பணத்துடன் வந்தவரை, திருப்பியும் அனுப்பியிருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் சிலரது பணத்தை, அங்கு வந்துள்ள வேறு பக்தரின் உதவிக்காகத் தரச் சொல்லி விடுவார். ஒருவர் கொடுக்கும் பணத்தை மகான் ஏற்கிறார் என்றால், அதற்கு சம்பந்தப்பட்டவர் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது! சென்னையின் பிரபலமான பிரமுகர் ஒருவர், மகா ஸ்வாமிகளை சந்திப்பதற்காக, காஞ்சி மடத்துக்கு வந்திருந்தார். சரசரக்கும் வெள்ளை வேஷ்டி- கதர்ச் சட்டை; நெற்றியில் குங்குமப் பொட்டு; கையில் ‘கனமான’ பெட்டி. அந்த மனிதரின் தோரணை மற்றும் பெட்டியைப் பார்த்தாலே, அதில் இருப்பது கரன்ஸிதான் என்று சொல்லிவிடலாம்.

பிரபலமானவர் என்பதால், இவரது வருகை மடத்தையே பரபரப்புக்குள்ளாகியது. ஒரு சிலர் வணங்கினார்கள்; வேறு சிலர் கண்டும் காணாதது மாதிரி ஒதுங்கிக் கொண்டனர்.

மகா ஸ்வாமிகள் எப்போதும் தங்கி இருக்கும் ஓலைக் கொட்டகை பகுதிக்கு வந்த பிரபலம், வெளியே இருந்த நாற்காலியில் பவ்யமாக அமர்ந்தார். பிறகு, மகா ஸ்வாமிகளின் உதவியாளர் ஒருவரிடம், தான் வந்திருக்கும் விஷயத்தை பெரியவாளிடம் தெரிவிக்கும்படி சொன்னார். உதவியாளர் உள்ளே சென்று, மிகவும் பவ்யமாக… தன் வலக் கை விரல்களால் வாயைப் பொத்தியபடி ”……………. வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கணுமாம்” என்று பெரியவாளிடம் அமைதியாகச் சொன்னார்.

”அவரா? அவர் ஏம்ப்பா என்னைப் பார்க்க வரணும்?” என்று புருவம் சுருக்கினார். ”என்ன விஷயம்னு சொல்லலை… அவர் வந்திருக்கிற தோரணையப் பார்த்தா உங்களைப் பார்க்காம இங்கேர்ந்து நகர மாட்டார் போலிருக்கு” என்றார் உதவியாளர்.

சற்று யோசித்த ஸ்வாமிகள், ”சரி… வரச் சொல்லு” என்றார்.

அடுத்த சில நிமிடங்களில் மிகுந்த பவ்யமாக உள்ளே நுழைந்த பிரபலம், தான் கொண்டு வந்திருந்த பெட்டியை பெரியவா காலடியில் சமர்ப்பித்து விட்டு, சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார்; மகானும் ஆசிர்வதித்தார். மகா ஸ்வாமிகள் பிறந்த ஊரை ஒட்டித்தான் தனது பிறந்த ஊரும் என்பதைப் பேச்சினூடே அந்தப் புள்ளி தெரிவித்தார்.

பிரசாதத்தை வாங்கிக் கொண்ட பிரபலம், ”ஸ்வாமீ… பெட்டியில பணம் இருக்கு. மடத்தோட கைங்கர் யத்துக்குப் பெரியவா பயன்படுத்திக்கணும். இதான் என் ஆசை” என்று சொல்லி, அமைதி காத்தார்.

பெரியவாளும் ஏதும் பேசவில்லை. தான் வந்த காரியம் பூர்த்தி ஆகி விட்டது என்று முடிவெடுத்த அந்தப் பிரபலம், சில நிமிடங்களுக்குப் பிறகு தான் புறப்படுவதற்கு அனுமதி கேட்டார்.

மகா ஸ்வாமிகள் மௌனம் கலைந்தார். பிறகு, அந்தப் பிரபலத்திடம் ”பெட்டியை எடுத்துண்டு போயிடுப்பா. உன்னோட ஊர்ல ஒரு சிவ ஸ்தலம் ரொம்ப பாழடைஞ்சு போயிருக்கு. அந்தக் கோயில் திருப்பணி செய்ய வேண்டிய நிலைல இருக்கு. இதோ, இந்தப் பணத்தைக் கொண்டே அந்த வேலையை ஆரம்பி” என்றார் நிதானமாக.

பெரியவாளிடம் இருந்து இப்படியரு பதிலை அந்தப் புள்ளி எதிர்பார்க்கவில்லை. ”பெரியவா… நீங்க சொன்ன மாதிரியே என் ஊர் கோயில் திருப்பணியை என் சொந்தப் பணத்துல நானே பிரமாதமா செஞ்சுடறேன். ஆனா, இப்ப நான் கொண்டு வந்த இந்தப் பணத்தை நீங்க ஏத்துக்கணும். அது எனக்குப் பெரிய பாக்கியம்” என்று இறைஞ்சியபடி நின்றார்.

பெரியவாளுக்கு அருகில் நின்றிருந்த – மடத்துப் பொறுப்பில் உள்ள முக்கியஸ்தர்கள் சிலர், பெரியவா என்ன பதில் சொல்வார் என்று அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சில விநாடிகளுக்குக் கண்களை மூடியபடி இருந்த அந்த பரப்ப்ரம்மம் மெள்ளக் கண்களைத் திறந்தது.

கைகளைக் கட்டியபடி நின்றிருந்த அந்தப் பிரபலம் பெரியவா முகத்தையே ஆர்வமாகக் கவனித்தார்.

 

Unfortunately, I dont seem to find the continuation to this article. My sincere apologies for the inconvenience.Categories: Devotee Experiences, Upanyasam

1 reply

  1. chi.mahesh, it is a great service from you , thanks a lot. Please continue for the sake of ,especially, youth

Leave a Reply

%d bloggers like this: