பாஸ்கர ராயர்

 

பல நூல்களை இயற்றி, பல நூல்களுக்கு விரிவுரையும் (பாஷ்யம்) எழுதியுள்ள ஆதிசங்கரபகவத்பாதாள் ஒரு சமயம் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவுக்கு விரிவுரை எழுதவேண்டும் என நிச்சயித்து தன் சிஷ்யர் ஒருவரை அந்த மூலச்சுவடிகளை எடுத்துவர அனுப்பினார்.திரும்பி வந்த சிஷ்யர் கொடுத்த சுவடிகள் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவினுடையதாக இருக்கக் கண்டு ஆசார்யாள் சரியான சுவடிகளை எடுத்து வரச்சொல்லி சிஷ்யரைத் திருப்பியனுப்பினார். இரண்டாம் முறை அவர் கொண்டு வந்ததும் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமாவினுடையதுதான். மூன்றாம் முறையும் இதே போல நடக்க ஆசார்யாள்சிஷ்யரைக் கடிந்து கொண்டு “ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவுக்கும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவுக்கும் வித்யாசம் தெரியாதா உனக்கு?” என்று வினவ அச்சிஷ்யரோ, “நான் என்ன செய்வேன்? ஒவ்வொரு முறையும் அங்கு தேஜஸ்வினியான ஒரு சிறுமிநின்று கொண்டு ‘இதைக் கொண்டுபோய்க் கொடு’ என இச்சுவடிகளை என்னிடம்தருகிறாள். அவள் சொல் என்னைக் கட்டிப்போட்டு விடுகிறது.” என்று பதிலளித்தார்.பகவத்பாதாளுக்கு அது தேவியின் திருவிளையாடல் எனப் புரிந்து விட்டது. தேவியை வேண்டினார். அப்போது தேவி அசரீரியாக “என் ஸஹஸ்ரநாமாவுக்கு பாஷ்யம் எழுத பிற்காலத்தில் ஒருவன் பிறக்கப்போகிறான். என் சகோதரனின் ஸஹஸ்ரநாமாஎன்னிலிருந்து வேறுபட்டதல்ல. ஆகவே அதற்கு நீ பாஷ்யம் எழுது” எனக்கட்டளையிட்டாள். அது அவ்வாறே நடந்தது. ஆனால் தேவியே தேர்ந்தெடுத்த அந்த மஹான் பிறக்கத்தான் இந்த பாரததேசம் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அந்தத் தேவியின் ஸாந்நித்யம் படைத்தவராக வாழ்ந்த மஹான் ஸ்ரீபாஸ்கர ராயரைப் பற்றி சிறிது காண்போம்.

 

ஸ்ரீபாஸ்கரராயரின் முன்னோர் விஸ்வாமித்ர கோத்ரத்தைச் சேர்ந்த மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாகவத ஸம்பிரதாயத்தைச் சார்ந்தவர்கள். இவரது பிது: பிரபிதாமஹர்ஸ்ரீஏகநாதரும், பிது: பிதாமஹர் ஸ்ரீதுகாதேவரும், பிதாமஹர் ஸ்ரீயமாஜி பண்டிதரும் சிறந்த ஸ்ரீபாண்டுரங்க பக்தர்கள். ஸ்ரீயமாஜிபண்டிதருக்கும் ஸ்ரீமதி சந்திரமாம்பாளுக்கும்தவப்புதல்வனாக உதித்தவர் இவர் தந்தை ஸ்ரீகம்பீரராயர். தன் தாய்மாமனானஸ்ரீவத்ஸகோத்ரத்தைச் சேர்ந்த ஆகமாசார்ய ஸ்ரீநாராயணர் என்பவரிடம் ஆகம ஸாஸ்திரங்களைப் பூர்ணமாகக் கற்றார். பிறகு ஸ்ரீமதி கோணமாம்பாளை மணந்து பீஜபூர் நகரில் வசித்து வந்தார். ஒரு சமயம் விஜய நகரத்து அரசர் இவரை தன் சபையில் மஹாபாரத உபன்யாசம் செய்யச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்து அவருடைய வித்வத்தையும் வாக்வன்மையையும் பாராட்டி அவருக்கு பரம்பரையாக வரக்கூடிய’பாரதீ’ என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தார். பீஜபூரில் அதில்ஷாவின் தர்பாரில் மந்திரியாக இருந்த இவர் மன்னனின் வேண்டுகோளின்படி மஹாபாரதம் முழுவதையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தார்.

ஸ்ரீகம்பீரராயர்-ஸ்ரீமதிகோணமம்பா தம்பதியின் மூத்த மகனான ஸ்ரீநாராயணன் புத்திக்கூர்மையில் குறைந்தவராக இருக்கவே, ஸ்ரீமதி கோணமாம்பா தன் கணவரைப் போல்அறிவிற் சிறந்ததொரு மகனை வேண்டி ஸ்ரீசூர்ய பகவானைப் பிரார்த்தித்தாள். ஆந்திரப்பிரதேசத்தை சேர்ந்த பாக்யநகரமென அன்று அறியப்பட்ட, இன்றைய ஹைதராபாதில் ஸ்ரீசூர்ய பகவானின் அருளால் 1683ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி கிருத்திகா நக்ஷத்திரத்தில் (வைசாக மாதம் ஸுக்லபக்ஷ திரிதியை) நான்கு கிரகங்கள் உச்சத்தில்இருக்கையில் ஸ்ரீபாஸ்கரராயர் பிறந்தார். இந்தப் பாக்யநகரத்தை சுருக்கமாக ‘பாகா’என்றும் அழைப்பர். பிறந்த போதே உதிக்கிற இளம் சூரியனைப் போல தேஜஸுடன் ஸ்ரீபாஸ்கர ராயர் விளங்கினார்.

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை ஸ்லோக வடிவில் ‘விஷ்ணு ஸஹஸ்ரநாமபத்யப்ரஸுனாஞ்ஜலி’ என்னும் நூலாக இயற்றிய ஸ்ரீகம்பீரராயர், தன் இளைய மகனுக்குஐந்து வயதிலேயே வாக்தேவதா மந்த்ரோபதேசத்தைச் செய்து சரஸ்வதி உபாசனையில் ஈடுபடுத்தினார். ஏழாவது வயதிலேயே காசி க்ஷேத்திரத்தில் ஸரபேஸ்வரஸ்தோத்திரத்தைக் கூறும் அளவுக்குத் திறமை பெற்றவராக, அங்கு தன் தந்தையால்உபநயனமும் செய்விக்கப்பட்டார் ஸ்ரீபாஸ்கரராயர். மிகவும் சிரமமான கிரந்தங்களிலும்,சாஸ்திரங்களிலும் பிறர் அதிசயிக்கும் வண்ணம் நல்ல தேர்ச்சி பெற்றார். பிறகு நாராயணபேட் என்னும் மஹபூப் நகரிலுள்ள பிரசித்தமான நகரத்தினருகில் லோகபள்ளி என்ற கிராமத்தில் வசித்துவந்த ஸ்ரீநரஸிம்ஹயஜ்வா என்னும் ஸாதகரான ஒரு குருசிருங்கேரி சாரதா பீடத்துக்குச் செல்லும் வழியில் ஸ்ரீகம்பீரராயரின் இல்லத்துக்கு வந்தவர், இச்சிறுவனின் அறிவுத்திறனைக் கண்டு வியந்து அவரைத் தாய் தந்தையின்அனுமதியுடன் தன் குருகுலத்தில் அத்யயனம் செய்ய அழைத்துச் சென்றார். அவரிடம்சிறிது காலத்திலேயே ஸ்ரீபாஸ்கரராயர் பதினெட்டு வித்யைகளையும் நன்கு கற்றார்.பிறகு காவிரிநதியின் தென்கரையில் உள்ள திருவாலங்காட்டில் ஸ்ரீகங்காதர வாஜபேயியிடம் கௌடதர்க்கத்தைக் கற்றார். ஸ்ரீருக்மண்ண பண்டிதரிடம் சந்தஸ் மற்றும் அலங்கார சாஸ்திரங்களை அத்யயனம் செய்தார். தன் பதினாறாவது வயதிற்குள் இந்த ஆதாரக் கல்வி முழுவதையும் அவர் கற்று முடித்துவிட்டார்.

இதன்பின்னர் குஜராத் தேசத்தைச் சேர்ந்த’ப்ரகாஸாநந்த நாதர்’ என்ற தீக்ஷாநாமத்தைக் கொண்ட ஸ்ரீசிவதத்த சுக்லர் என்பவரிடம் ஸ்ரீபாஸ்கரராயர் பூர்ணாபிஷேக தீக்ஷை பெற்று ஸ்ரீவித்யோபாசனையில் ஸித்தி பெற்று குருவின் அனுமதியுடன் மந்திர சாஸ்திரவிஷயங்களை பிரசாரம் செய்ய பாரதயாத்திரை புறப்பட்டார். அதர்வண வேத அத்யயனம் மறைந்து வருவதனால் அதை உத்தாரணம் செய்யும் பொருட்டுத் தானேஅதை அத்யயனம் செய்து பிறகு தன் சிஷ்யர்களுக்கும் போதித்தார்.

ஸ்ரீபாஸ்கரராயர் தன் பதினெட்டாவது வயதில் ஆனந்தீ என்ற பெண்ணை மணந்துஅவளுக்கும் தீக்ஷை செய்வித்து ஸ்ரீபத்மாவதியம்மாள் என்ற தீக்ஷாநாமத்தைச் சூட்டினார். இவர்களுக்கு பாண்டுரங்கனென்ற ஒரு மகனும், அம்பிகா என்னும் மகளும் பிறந்தனர். மகனைப் பற்றிய விவரங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் மகள் திருமதி அம்பிகா தேவ் குடும்பத்தில் விவாகம் செய்யப்பட்டு அவள் சந்ததியினர் இன்றும் பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர்.

ஸ்ரீகம்பீரராயருக்குத் தன் மகன் ஸ்ரீபாஸ்கரராயர் ஆதில்ஷாஹி ராஜ்யத்தில் மந்திரிசபையில் பணிபுரிய வேண்டுமென அவா. ஆனால் ஸ்ரீபாஸ்கரராயருக்கோ அதில் எந்த விதமான நாட்டமும் இல்லாது, மேன்மேலும் தன் சாஸ்திர ஞானத்தை அதிகமாக்கிக்கொள்வதிலும், ஹோமம் முதலிய வைதிக அனுஷ்டானங்களிலும், காவியங்கள் இயற்றுவதிலும், ஆன்மிக யாத்திரைகளை மேற்கொள்வதிலுமே நாட்டமிருந்தது. அவர் ஒருமுறை குஜராத்திற்குச் சென்றபோது வல்லப சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த ஒரு பிரபல வித்வானை வாதத்தில் ஜெயித்தார். அடுத்து வழியில் சந்தித்த ஒரு மத்வசந்யாசியையும் வாதத்தில் ஜெயித்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்கிஅவருடைய பூர்வாஸ்ரம சகோதரரின் மகளான பார்வதியை மணந்து கொண்டார். பிறகுபீஜபூரில் தன் தந்தையுடன் சிறிது காலம் வசித்த பின்னர் மறுபடி யாத்திரை மேற்கொண்டுவழியில் பல யாகங்களையும், ஆலயங்களின் புனருத்தாரணங்களையும், பல வித்வான்களிடையே வாதங்களையும் செய்து கொண்டு கிருஷ்ணா, காவிரி நதிகளின் கரைகளில் யாத்திரை செய்து, அங்கு தனக்குப் பரிசளிக்கப்பட்ட நிலங்களை வேதவித்துகளின் ஆத்மரக்ஷணத்திற்காகப் பரிசளித்தார். அவர் இவ்வாறு பல வித்வான்களுடன் செய்த வாதங்களின் முடிவுகளையும், ஆராய்ந்து உணர்ந்தஉண்மைகளையும் அவ்வப்போது நூல்களாக பதிவு செய்துள்ளார். தான் ஓர் அக்னிஹோத்ரியாக இருந்தபடியால் யாத்திரை செய்த போதும் கூட இஷ்டிகளையும்,யாகங்களையும் செய்து வந்தார். ஹிந்து ஸம்ஸ்காரங்களையும், தர்மத்தையும் ரக்ஷிப்பதே அவருடைய குறிக்கோளாக இருந்தபடியால், தன் முழுக் கவனத்தையும் மனோ, வாக்கு, காயங்களால் அவ்விஷயத்தில் ஈடுபடச் செய்தார். பல சிஷ்யர்களை உபாஸனா மார்க்கத்தில் செலுத்தியதுடன், ஸ்ரீஆதிசங்கரரின் அத்வைதம் முதலான சித்தாந்தங்களை, அவற்றுக்கு எதிரான பல பண்டிதர்களுடன் வாதம் செய்து அவர்களனைவரையும் வென்று நாட்டினில் பரப்பினார்.

அவர் தன் யாத்திரையில் தஞ்சாவூருக்கு விஜயம் செய்த போது தஞ்சையின் அரசர் அவருக்கு காவிரிக் கரையில் ஒரு கிராமத்தைப் பரிசளித்தார். அதுவே பின்னர் பாஸ்கரராஜபுரம் என வழங்கப்பட்டது. அங்கு ஸ்ரீபாஸ்கரராயர் ஒரு மேருவை ஸ்தாபித்து நித்ய பூஜை நிகழ ஏற்பாடு செய்தார். பல நாள்களுக்குப் பிறகு ஸ்ரீபாஸ்கரராயரின் மனைவி திருமதி ஆனந்தி அங்கு பாஸ்கரேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானின் லிங்கத்துடன் ஆனந்தவல்லி என்னும் அம்பிகையை உடனிருத்தி கோவிலொன்றைக்கட்டினாள். இது இவ்வாறிருக்க ஸ்ரீபாஸ்கரராயரின் தாயாரின் வியோக செய்தி கிடைத்துஅவர் தன் சொந்த ஊருக்குத் திரும்பி அவளுடைய அந்திம காரியங்களைச் செய்தார்.சிறிது காலத்தில் அவருடைய தந்தையும் காலகதியடைந்தார்.

பிறகு தன் இரு மனைவியருடனும் ஸ்ரீபாஸ்கரராயர் இராமேஸ்வரம், மீனாக்ஷி அரசாளும் மதுரை, திருவனந்தபுரம் முதலிய க்ஷேத்ரங்களைத் தரிசித்துக் கொண்டு சிருங்கேரியை அடைந்தார். இங்கு அவர் சாரதா பீடத்தை அலங்கரித்த ஸ்வாமி புருஷோத்தம பாரதி அவர்களைத் தரிசித்து அவரிடமிருந்து பிரசாதங்களைப் பெற்றார்.பிறகு அவர் தென் கர்நாடகா, மஹாபலேஸ்வர், கோல்கொண்டா வழியாககோல்ஹாபூரை அடைந்து அங்குள்ள மஹாலக்ஷ்மிக்கு பூஜைகள் செய்தார். தன்யாத்திரையில் பல அரசர்களால் கௌரவிக்கப்பட்டு சன்மானங்கள் அளிக்கப்பட்டார்.அவர் திரியம்பகேஸ்வரரையும், ஸப்தஸ்ருங்கியையும் தரிசனம் செய்துவிட்டு சூரத்நகரில் வசித்த தன் குருவான ஸ்ரீசிவதத்த சுக்லரை அவருடைய குடும்பத்துடன் தரிசித்துஅவர்களுக்கு வஸ்திரங்களையும் தக்ஷிணையையும் தந்து கௌரவித்தார். பிறகு ஸோமநாதர் ஆலயத்தில் பூஜைகளைச் செய்த பின் காஷ்மீரம் சென்றடைந்தார். அங்கு காஷ்மீரத்து வித்வான்களுடன் வாதம் செய்துவிட்டு ஓங்காரேஸ்வர் கோவிலுக்கும்,ஹரித்வார், பஞ்ச பிரயாக், கங்கோத்ரி முதலான இடங்களைத் தரிசித்து, தொடர்ந்த தன் யாத்திரையில் நேபாளத்தில் பசுபதிநாதரைத் தரிசனம் செய்தார். இங்கு அரசரும் கற்றறிந்த பண்டிதர்களும் அவரை வரவேற்றனர்.

திரும்புகையில் அவர் அயோத்யா, மதுரா, காசி, கயையிலுள்ள கௌதம ஆஸ்ரமம் ஆகியவற்றைக் கண்டு தரிசித்தார். காசி க்ஷேத்திரத்தில் ஒரு ஸோமயாகம் செய்தார்.பின்னர் அங்கேயே சிறிது காலம் வசித்து வந்தார். இவர் காசியில் வசிக்கும்போதுஅங்குள்ள வைதிகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்து குறைகூறும் தங்களின் வழக்கப்படி ஸ்ரீபாஸ்கரராயரை நிந்திக்கப்பட வேண்டிய வாமசாரத்தைச் சேர்ந்தவரென எண்ணி இவரை மட்டம் தட்ட, தகுந்த சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.இதையறிந்த ஸ்ரீபாஸ்கரராயர் “நான் ஒரு மஹாயாகம் செய்வதாயிருக்கிறேன்.அச்சமயம் என்னுடன் வாதம் புரிய விரும்புபவர்கள் வந்து வாதம் புரியலாம்” என ஓர் அறிக்கையை வெளியிட்டார். இந்தச் சவாலை ஏற்ற சில பண்டிதர்கள் அச்சமயம் காசியில் தங்கியிருந்த ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்ற ஞானியும், தன் சரீரத்தில் பூசப்படும்விபூதியெல்லாம் குங்குமமாக மாறிவிடுவதால் ஸ்ரீபரமஹம்ஸ குங்குமானந்தநாதர் எனஅழைக்கப்படும் மஹானையும் உடனழைத்துக் கொண்டு யாகசாலைக்கு வந்தனர்.ஸ்ரீபாஸ்கரராயர் அவர்களனைவரையும் வரவேற்று உபசரித்து ஆசனங்கள் அளித்துமரியாதை செய்தார்.

ஸ்ரீபாஸ்கரராயருடைய திறமை மிகுந்த வாதத்தினையும், மந்திர சாஸ்திரத்தில்அவருக்கிருந்த புலமையையும் கண்டு அவர்கள் யாவரும் வியந்தனர். அவர்களால்கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் சுலபமாக அவர் பதிலளித்தார். அப்பண்டிதர்கள்ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவளியில் 237ஆவது நாமமான ‘மஹ சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா’ என்பதில் கூறப்பட்ட 64 கோடி யோகினீ தேவதைகளின் பெயர்கள்,உத்பத்தி, லக்ஷணம், ஆயுதங்கள், சரித்திரம் முதலியவற்றைக் கூற முடியுமா?” எனக் கேட்டனர். சற்றும் தயங்காது ஸ்ரீபாஸ்கரராயர் அவர்களை இன்று சௌஷாஸிகாட் என அழைக்கப்படும் கங்கைக் கரைக்கு வரவழைத்து, “நான் அவற்றைக் கூறுகிறேன். நீங்கள்எழுதிக் கொள்ளுங்கள்” எனக் கூறி அம்பாளைத் தியானித்து மடை திறந்தது போல் கூறத் தொடங்கினார். அந்தப் பண்டிதர்கள் முறைவைத்து எழுதியும் எழுதிமாளாது கை சலித்தனர். ஸ்ரீகுங்குமானந்தர் அவர்களிடம், “இந்த மஹானை சாமான்ய பண்டிதராகஎண்ணவேண்டாம். இவர் அம்பிகையின் அருள் பெற்ற பெரும் உபாசகர். அம்பாளே இவர் தோள்மேல் கிளி உருவில் அமர்ந்து உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறிவருகிறாள்.ஆகவே இவரை உங்களால் வெல்ல முடியாது” எனக்கூறி அபிஷேக தீர்த்தத்தை அவர்கள் கண்களில் தெளிப்பதன் மூலம் திவ்யசக்ஷுஸ்ஹை தந்து பார்க்க வைத்தார். அவர்களும் அம்பாளைத் தரிசிக்கும் பாக்யம் பெற்று ஸ்ரீபாஸ்கரராயரை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.

பின்னர் அவர் காமாக்யா பீடத்திற்கு வந்து அங்குள்ள ஜனங்களால் வரவேற்கப்பட்டு காமாக்யா ஆலயத்தில் பூஜைகள் செய்தார். மந்திரவாதங்களும், தாந்திரீகர்களும்நிறைந்ததெனக் கருதப்பட்ட அந்த இடத்துக்குப் போவதை சாதாரணமாக மக்கள் விரும்பியதில்லை என்பதுடன் போகவே பயந்தனர் எனவும் கூறலாம். பிறகு அவர் நாக்பூர், மராத்வாடா ஜோதிர்லிங்கம், நாகநாதர், பரலிவைத்யநாதர் முதலியக்ஷேத்ரங்களைத் தரிசித்து விட்டு கடைசியாக துல்ஜாபூரில் உள்ள துல்ஜாபவானியைத்தரிசித்தார். அவருடைய முன்னோர் ஸ்ரீபாண்டுரங்க விட்டலரின் பக்தர்களானபடியால்அங்கு சென்று பூஜைகள் செய்து பாண்டுரங்காஷ்டகத்தை இயற்றினார். ஸ்ரீபாஸ்கரராயர்கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா ஜில்லாவிலிருக்கும் ஸந்நதி க்ஷேத்திரத்துக்குச் சென்றுதன் குலதேவதையான ஸ்ரீசந்த்ரலாபரமேஸ்வரிக்கு அங்கு ஸ்ரீசக்ரவடிவில் ஓர் ஆலயம் எழுப்பினார். அங்கு அந்தணர்கள் வசிக்க ஓர் அக்ரஹாரம் அமைத்து நித்ய பூஜை நடக்கவும் ஏற்பாடுகள் செய்தார். தேவியின் மீது ‘சந்த்ரலாஷ்டகம்’ என்னும் ஸ்தோத்ரத்தையும் இயற்றினார்.

மஹாராஷ்டிரத்தில் ஸ்ரீசிவாஜிராஜாவின் பேரனான ஸ்ரீசாக்ஷுராஜாவினுடையசேனாதிபதியாக இருந்தவர் ஸ்ரீதானாஜி ஜாதவ் என்பவர். அவருடைய பிள்ளையானஸ்ரீசந்த்ரஸேன ஜாதவ் என்பவர் கர்நாடக மாநிலத்தின் பாலகி என்ற ஊரின் சிற்றரசனாகஇருந்தார். இவர் ஸ்ரீபாஸ்கரராயரிடம் பெருமதிப்பும், மரியாதையும் கொண்டவர்.இவருக்குப் புத்ரபாக்யம் இல்லாதிருந்தது. ஒரு முறை தன் ஊருக்கு அருகில் விஜயம் செய்த ஸ்ரீபாஸ்கரராயரைத் தரிசித்து தன் மன ஏக்கத்தை வெளியிட்டான். அவரும் “என் ஆசீர்வாதத்தினால் உனக்கொரு புத்திரன் பிறப்பான்” என அனுக்கிரகித்து பிரஸாதம் கொடுத்தார். அதே போல ஜாதவின் மனைவியும் கருவுற்றாள். இதற்கிடையில்ஸ்ரீபாஸ்கரராயரின் சிஷ்யரான ஸ்ரீநாராயண தேவரென்னும் ஓர் உபாசகர் பால்கி நகருக்குவந்தார். இவர் வாக்ஸித்தி பெற்றவர். இவருக்கு ஸ்ரீபாஸ்கரராயருடன் இருந்த தொடர்பு அறியாத ஜாதவ் தன் பத்னிக்கு என்ன சந்தானம் ஏற்படுமென அவரைக் கேட்டான்.அவரும் தற்செயலாக பெண் குழந்தை பிறக்குமென்று கூறினார். திடுக்கிட்ட ஜாதவ் ஸ்ரீபாஸ்கரராயர் கூறியிருந்ததை அவரிடம் வெளியிட்டான். கோபமடைந்த அவர்”முட்டாளே! என் குருவின் வார்த்தையை என்னிடமே சோதித்து அபசாரம் செய்து விட்டாயே. அதன் பலனாக உனக்கு ஆணுமில்லாது பெண்ணுமில்லாது நபும்ஸகனாகஒரு குழந்தை பிறக்கும்” எனக் கூறிவிட்டு அகன்றார். அது அவ்வாறே நேர்ந்தது. சிலவருடங்களுக்குப் பின் மறுபடி ஸ்ரீபாஸ்கரராயர் அங்கு வந்தபோது சந்திரசேனன் தன்மனைவியுடனும், குழந்தையுடனும் அவரைக் கண்டு வணங்கி நடந்ததை விவரித்து வருந்தினான். இது அவனது பாபத்தினால் வந்த விளைவு என்றாலும், தன் வாக்கு பொய்த்துப் போகக்கூடாதென்பதற்காக அந்தக் குழந்தையைத் தன் சூரியஉபாஸனையினால் ஆணாக மாற்றத் திருவுள்ளம் கொண்டு, பக்கத்தில் கிருஷ்ணாநதிக்கரையில் த்ருசார்க்யப்ரதானமென்ற ஒரு விரதத்தை ஆரம்பித்தார். தினமும் காலையில் கிருஷ்ணா நதிக்கரைக்கு வந்து சூரியனை வணங்கி அர்க்யம் கொடுத்து ராமசந்த்ரஜாதவ் என்ற அந்தக் குழந்தை ஆண்மை பெறப் பிரார்த்தித்தார். வெயிலில் அவர் கால் கொப்பளிக்க நடக்க வேண்டியிருப்பதைக் கண்டு அவரது சிஷ்யர்கள்ஆஸ்ரமத்தை நதிக்கரையில் அமைத்தாலென்ன என அவரை வினவினர். அவரோ கேலியாக “நதியையே ஆஸ்ரமத்துக்கு அருகில் கொண்டுவந்து விடலாமே” என்றார்.மறுநாள் அதிகாலையில் ஸ்ரீபாஸ்கரராயர் தன் ஆஸ்ரமத்தின் வாயிலிலேயே அமர்ந்து சூரியனைத் தியானித்தார். தன் முன் தோன்றிய சூரியபகவானிடம் கிருஷ்ணாநதியைத்தன் ஆஸ்ரமத்துக்கு அருகில் திசை திருப்ப வேண்டினார். குழந்தைக்கு ஆண்மையைநேராகவே அளிக்கத் தயாராக இருந்த சூரியனிடம், “நான் பிச்சைக்காரனில்லை, என்திருசபாஸ்கர வழிபாட்டினாலேயே இது நடக்க வேண்டுமென நினைக்கிறேன். இதனால் உலகுக்கும் சூரியோபாசனையின் மகிமை தெரியட்டும்” என்றார். ஆக கிருஷ்ணா நதி தன்திசையினை மாற்றி ஆஸ்ரமத்திற்கு அருகில் பிரவேசித்தது. இதனால் உபாசனையும்நன்கு முடிந்து குழந்தை ஆணாக மாறியது. இதற்கு ஆதாரமாக அந்த ஊரில் இன்றும்கிருஷ்ணா நதி முன்பு ஓடிய வழி, இப்போதைய வழி என இரு வழிகள் இருக்கின்றன. இந்த சூரிய வழிபாட்டை “த்ருச பாஸ்கரம்” என்னும் நூலாகவும் ஸ்ரீபாஸ்கரராயர் இயற்றியுள்ளார்.

பின்னர் ஸ்ரீபாஸ்கரராயர் தஞ்சையை ஆண்ட போசலே மன்னரால் தனக்கு காவிரிநதிக்கரையில் அளிக்கப்பட்டு பாஸ்கரராஜபுரமென்னும் பெயர் பெற்ற கிராமத்தை தன் நிரந்தர வாஸஸ்தலமாக ஆக்கிக் கொண்டார். இங்கு அவர் வசிக்கும்போது அவருடைய புகழும், தெய்விக குணங்களும் சுற்றுப்புற நகரங்களில் பரவும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் நடந்தன. ஒரு சமயம் அவர் ஒரு சிறுதொகை ஒருவரிடம் கடனாக வாங்க நேரிட்டது.ஆனால் அதைத் திருப்பித் தருவது மட்டும் எப்படியோ தட்டிக்கொண்டு வந்தது. ஒரு நாள்அவர் மஹாநியாஸம் செய்து தேவியின் நவாவரண பூஜையில் ஈடுபட்டிருக்கும் சமயம்,கோபத்தில் தன்னை மறந்தவராக அவருக்குக் கடன் கொடுத்தவர் ஸ்ரீராயரதுபெருமைகளைச் சற்றே மறந்தவராக அவரது இல்லத்துக்கு வெளியே நின்று பெரிதாகக் கூக்குரலிட்டார். பூஜையில் ஆழ்ந்திருந்த ஸ்ரீபாஸ்கரராயர் மனம் வெதும்பியவராக தான் பூஜை செய்யும் அம்பிகையின் உருவினைப் பார்த்து, “உன்னை நம்பி பூஜிப்பவர்களின் ருணத்தினையெல்லாம் (கடனை) போக்குபவள் என்றுதானே உன்னை ‘அபர்ணா’ என்று அழைக்கின்றனர்? என் கடனை அடைக்காதவரை உனக்கு எப்படி அந்தப் பெயர்பொருந்தும்” என வேண்டினார். அதே சமயம் அவரது இல்லத்தின் வாயிலில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. அவரது மனைவி பணமுடிச்சுடன் வெளிவந்து, “ஏன் சப்தம்செய்கின்றீர்கள்? இதோ உங்களுக்குச் சேரவேண்டிய பணம்” என அக்கனவானின்கரங்களில் அதை அளித்துச் சென்றாள். பின்னர் ஸ்ரீபாஸ்கரராயரைச் சந்தித்த அந்தக் கனவான் அவரது மன்னிப்பைக் கோரி நிகழ்ந்ததைக் கூறினார். தன் மனைவி நிச்சயமாகஅவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என அறிந்திருந்த ஸ்ரீபாஸ்கரராயருக்குஅப்போதுதான் அம்பாளே அவ்வுருவில் வந்து தடன் கடனை அடைத்து அருள்புரிந்திருப்பது புரிந்தது. தன் குருவான ஸ்ரீகங்காதர வாஜபேயியின் வாஸஸ்தலமானதிருவாலங்காட்டிற்கு எதிரில் காவிரியின் எதிர் கரையில் அமைந்த இந்த பாஸ்கரராஜபுரத்தினில் வசிப்பதைத் தன் பெரும் பாக்யமென நினைத்த ஸ்ரீபாஸ்கரராயர்ஒரு சமயம் தன் பூஜையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஸ்திரியைத் தேவியாகபாவித்துத் தன் யோக பலத்தினால் தானிருந்து பூஜை செய்யும் இடத்திற்கு அவளை வரவழைத்து பூஜைக்குப் பிறகு மறுபடி அவளுடைய இருப்பிடத்துக்குத் திரும்பக் கொண்டுபோய்ச் சேர்த்து விட்டார்.

சிறிது காலத்துக்குப் பிறகு, தன் இகலோக வாழ்வின் அந்திம காலத்தைபாஸ்கரராஜபுரத்துக்கு அருகே உள்ள மத்யார்ஜுனம் எனப் புகழப்படும் திருவிடைமருதூரில் ‘பாஸ்கரநிலையம்’ என்னும் பெயர் பெற்ற மஹாதான தெருவிலுள்ள வீட்டில் கழிக்க இவர் நிச்சயித்தார். மாலை வேளைகளில் தன் வீட்டின் திண்ணையில் சுவரில் சாய்ந்து கொண்டு பாதங்களைத் தூணின் மேல் உயர்த்தி வைத்துக்கொண்டு உட்கார்ந்து தன் சிஷ்யர்களுக்குப் பாடம் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தினமும் மாலையில் அருகிலிருந்த வேப்பத்தூர் என்னும் கிராமத்திலிருந்து ஒரு சந்யாஸி திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி கோவிலில்தரிசனம் செய்வதற்காகப் போவது வழக்கம். தெருவில் உள்ள எல்லாரும் அந்தச் சன்யாஸி வரும் சமயம் எழுந்து நின்று மரியாதை செய்வர். ஆனால் தேவியின் நினைவில் ஆழ்ந்திருக்கும் ஸ்ரீபாஸ்கரராயரோ அந்த யதியைக் கண்டு கொள்வதே இல்லை. அதனால் அத்துறவிக்கு இவர் மீது ஒரு விரோத மனப்பான்மை ஏற்பட்டது. ஒரு நாள் பிரதோஷ சமயத்தில் அந்தச் சந்நியாசியும் ஸ்ரீபாஸ்கரராயரும் நேரிடையாகச்சந்திக்க நேரிட்டது. அப்போது கூடியிருந்த மக்களின் முன்னிலையில் அந்தச் சந்நியாசிஸ்ரீபாஸ்கரராயரைப் பழித்துப் பேசினார். மற்ற இல்லறவாசிகளைப் போல் தான் அவரை வணங்கியிருந்தால் யதியின் சிரம் வெடித்துச் சிதறியிருக்கும் எனக் கூறிய ஸ்ரீபாஸ்கரராயர், இதை நிரூபிக்க அவரது தண்டத்தையும், கமண்டலத்தையும் ஒரு தூணின் ஓரமாக வைக்கச் செய்து அதனை ஸாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார்.அவை சுக்கல்கள் பலவாக வெடித்துச் சிதறின. தான் தன் உடலில் தேவியின் மஹாஷோசமைத்யாஸம் செய்து கொள்வதால் தான் எவரையும் வணங்க இயலாதென்பதை அவருக்கும் கூடியிருந்தோருக்கும் உணர்த்திய ஸ்ரீபாஸ்கரராயர்,மறுநாளிலிருந்து அந்தச் சந்நியாசி தன் இல்லத்தைக் கடக்கும்போது தான் எழுந்துவீட்டுக்குள் சென்று விடுவதை வழக்கமாகக் கொண்டார்.

ஸ்ரீபாஸ்கரராயர் தன் மனித உடலை 1776ஆம் ஆண்டு ஆஷாட சுக்ல திரயோதசியன்றுதன் 93ஆவது வயதில் உதறி தேவியின் சாயுஜ்யபதம் சேர்ந்தார்.

ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமத்திற்கு ‘ஸௌபாக்ய பாஸ்கரம்’ என்னும் பாஷ்யத்தை இயற்றிய இவர் வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவ்யம்,வைதிகம், ஸ்ம்ருதி, ஸ்தோத்ரம், மந்த்ரசாஸ்திரம், முதலிய விஷயங்களில் சுமார் நாற்பத்தி இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.

 Categories: Devotee Experiences

5 replies

 1. http://paramachariar.blogspot.com/2011/01/62.html

  Namaste.
  Please check
  the above link as well.
  God Bless.
  Anbudan,
  Srinivasan. V.

 2. RARE AND WONDERFUL INFORMATION. I COULD NOT CONTAIN TEARS ROLLING DOWN MY CHEEKS.

  THANKS A LOT FOR THE GOOD EFFORT.

 3. I am too small to pass a comment on such great personalities who have uploaded such wonderful articles

 4. excellent information,i had heard about “bashyam” for vishnu sahasranamam was tried thrice by “adi shankara” but wasnot possible, but not so far heard about “bhaskara rayar”,thanks for this ,pl contribute more, at least let us read and educate ourselves on this

  long live hinduism.long live vedas.long live these kind of mails

 5. Astonishing. I am spell-bound. What more can I say! THANK YOU SO VERY MUCH for uploading this mini-biography. Namaskaram.

Leave a Reply

%d bloggers like this: