Aanma Sakthi

பெரியவாளின் ஆன்ம பலம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துகிற இரண்டு சம்பவங்களை மெய் சிலிர்க்க விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்:

”பெரியவா யாத்திரை போறப்ப, அங்கங்கே சின்னச் சின்ன ஊர்லகூட தங்கிட்டுப் போறது வழக்கம். அப்படித்தான், குண்டக்கல்லுக்கு முன்னால ‘ஹக்ரி’ங்கற ஊர்ல பெரியவா தங்கினா. ஊருக்குள்ளே, சுமார் 10 கி.மீ. தூரத்துல சிவன் கோயில் ஒண்ணு இருந்தது. பக்கத்துலயே பெரிய ஆலமரம். அடுத்தாப்ல ஆத்தங்கரை. பாத்ததுமே பெரிய வாளுக்கு அந்த இடம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. அங்கே தங்கறதுன்னு முடிவு பண்ணினா.

சின்ன ஊர்தான்; ஆனா, பொட்டல்காடு. நொப்பும் நுரையுமா காட்டாறு ஒண்ணு ஓடிக்கிட்டே இருந்த காலமும் உண்டாம். ஆனா, நாங்க போன சமயத்துல மழையேதும் இல்லாம ஊரே வறண்டு கிடந்துது.

அந்த ஊர்ல கரும்புதான் பிரதான விவசாயம். சர்க்கரை ஆலையும் இருந்தது. தஞ்சாவூர் ஜில்லாக்காரர் ஒருத்தர்தான் அந்த ஃபேக்டரியோட ‘ஜி.எம்’மா இருந்தார். பெரியவா ஊருக்கு வந்திருக்கிற விவரம் தெரிஞ்சு, ஓடிவந்து நமஸ்காரம் பண்ணார். அவர்கிட்டே, ”நான் இங்கே வியாச பூஜை பண்ணலாம்னு இருக்கேன். உங்க ஊர்ல கொஞ்ச நாள் தங்கிக்கலாமா?”னு கேட்டார் பெரியவா.

ஆடிப்போயிட்டார் அந்த ஜி.எம். ”சுவாமி! அது எங்க பாக்கியம்! பெரியவா இங்கேதான் தங்கணும். என்னென்ன ஏற்பாடு பண்ணணுமோ, உத்தரவிடுங்கோ! அதையெல்லாம் நாங்க பண்ணித் தரோம்”னு பவ்யமா சொன்னார்.

அப்புறம்… நாலு லாரி நிறைய கீத்து, சவுக்குக் கட்டையெல்லாம் வந்து இறங்கித்து. 300 அடிக்குப் பந்தல் போட்டு, பெரியவா தங்கறதுக்கும், தரிசனம் பண்றதுக்கும் ஏற்பாடு பண்ணினார் அந்த அதிகாரி. பெரியவாளைத் தரிசனம் பண்றதுக்கு நிறையப் பேர் வருவாங்கறதால, சுமார் ஆயிரம் பேர் உக்கார்றதுக்கு வசதியா ஏற்பாடெல்லாம் பண்ணி முடிச்சார். எல்லா ஏற்பாடுகளும் பிர மாதமா நடந்து முடிஞ்சாலும், அன்னிக்கி ராத்திரி முழுக்கப் பெரியவா தூங் கவே இல்லை” என்று சஸ்பென்ஸோடு சொல்லி நிறுத்தினார் லக்ஷ்மி நாராயணன்.

பெரியவர் ஏன் தூங்கவில்லை? அந்த ஊரும், சிவாலயமும் பெரியவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும், அந்த ஆறு பல வருடங்களாக வறண்டே கிடந்தது. பருவமழையும் பொய்த்துப்போனது; ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். இதில் ரொம்பவே கவலைப்பட்டாராம் பெரியவர்.

லக்ஷ்மிநாராயணன் தொடர்ந்தார்… ”பெரியவா யாரோடயும் பேசாம ஆத்துப் பாதையையே வெறிச்சுப் பார்த்துட்டிருந்தார். சாயந்திரம் திடீர்னு எழுந்தவர், ஆத்தங்கரை நோக்கிப் போனார். ஆத்து மணல்ல இறங்கி நின்னார். கொஞ்சம் யோசிச்சவர், அப்படியே நடக்க ஆரம்பிச்சார். கிட் டத்தட்ட ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு அந்த மணல்லயே நடந்துபோயிட்டுத் திரும்பினார். அப்புறம் எங்களைக் கூப்பிட்டு, ‘சந்தியா ஜபம் பண்ணப் போறேன். யாராவது என்னைப் பார்க்க வந்தா, காலைல வரச் சொல்லு’னு சொல்லிட்டு, ஜபத்துல மூழ்கினார் பெரியவா.

நல்லா இருட்டிடுச்சு. அப்பல்லாம் ஹரிக்கேன் விளக்குதான். ஒண்ணோ ரெண்டோ பெட்ரோமாக்ஸ் லைட் இருக்கும். எல்லாத்தையும் ஏத்தி வைச்சோம்.

ஆச்சு… ராத்திரி பத்து மணி இருக்கும். காத்து குளுமையா வீசின மாதிரி இருந்துது. பொட்… பொட்டுனு உடம்புல ரெண்டொரு மழைத்துளி பட்டுது. லேசா தூத்தல் போட்டுது. அப்புறம், நிதானமா பெய்ய ஆரம்பிச்ச மழை, கொஞ்ச நேரத்துலேயே வேகமெடுத்து ஹோன்னு இரைச்சலோட வலுவா பெஞ்சுது. அங்கே இருந்த ஒரு சைக்கிள் ரிக்ஷாவுல பெரியவாளை உக்காரச் சொல்லிட்டு, பக்கத்திலேயே நான் ஒரு தாழங்குடையைப் பிடிச் சுண்டு நின்னேன்.

கிட்டத்தட்ட நாலு மணி நேரம்… வெளுத்து வாங்கிச்சு மழை. நடுராத்திரி ஒண்ணரை மணிக்குதான் ஓய்ஞ்சுது. காஞ்சு மணலா கிடந்த ஆத்துல தண்ணி ஓட ஆரம்பிச்சுது.

மறுநாள்… விடிஞ்சும் விடியாததுமா ஊர் ஜனங்க எல்லாம் அதிசயப்பட்டு, ‘பெரியவா மழையை வரவழைச்சுட்டார்’னு சொல்லி, கூட்டமா திரண்டு வந்து, அவரைத் தரிசனம் பண்ணிட்டுப் போனாங்க. பெரியவாளும் மனநிறைவோடு வியாச பூஜையைப் பண்ணி முடிச்சார்.

பெரியவா மகா தபஸ்வி! வியாச பூஜைங் கறது நமக்குச் சொன்ன காரணம். ஆனா, அந்த ஊருக்கு என்ன தேவையோ, அதை நிறைவேத்திக் கொடுத்தாரே, அதை இப்ப நினைச்சாலும் உடம்பே சிலிர்க்கிறது” என்று நெகிழ்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

”இப்படித்தான், மகாராஷ்டிரால பண்டர் பூர்னு சொல்ற பண்டரிபுரத்துக்குப் பெரியவா போனப்பவும் நடந்துது” என்று அடுத்த ஆச் சரியத்தையும் விவரித்தார் லக்ஷ்மிநாராயணன்.

பண்டரிபுரத்தில் ஓடும் நதியின் பெயர் பீமா. அந்த நதியில் பத்து வருடங்களுக்கும் மேலாகத் தண்ணீரே இல்லாமல், சுத்தமாக வறண்டு கிடந்ததாம்!

”ஆத்துல அங்கங்கே கிணறுகள் மாதிரி தோண்டி, சுமார் நூறு மீட்டர் ஆழத்துலேருந்து தண்ணி எடுப்பாங்க ஜனங்க. அதுவும், குடத்துல அவ்ளோ நீளத்துக்குக் கயிறு கட்டிக் கிணத்துக்குள்ளே இறக்கி… அந்தக் குடம் நிரம்பறதுக்கே எப்படியும் 20, 25 நிமிஷமாவது ஆயிடும். அந்த ஆத்துக்கு அக்கரைல ஒரு பாழடைஞ்ச மண்டபம் இருந்துது. அங்கேதான் பெரியவா தங்கி இருந்தா.

சாயந்தரம் 5 மணி இருக்கும்… பெரியவா அங்கேயே உக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சுட்டா. சரியா ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்… கனமழை பெய்ய ஆரம்பிச் சுது. ஆத்துல வெள்ளமா ஓடுச்சு தண்ணி. ரொம்ப நேரத்துக்கு மழை விடவே இல்ல. அப்புறம், பரிசல்கார னைக் கூட்டிண்டு வந்து, ராத்திரி 12 மணிக்குதான் இக்கரைக்கு வந்து சேர்ந்தா பெரியவா.

கூட்டம் பெரியவாளைச் சூழ்ந்துண்டு, நமஸ்காரம் பண்ணித்து. ‘ஸ்வாமி! நீங்கதான் மழையைக் கொண்டு வந்தீங்க’ன்னு நெக்குருகிச் சொன்னாங்க ஜனங்க.

‘என் கையில என்ன இருக்கு! உங்க பண்டரிநாதர்தான் மழையைக் கொண்டு வந்தார்’னு சொல்லிட்டுச் சிரிச் சார் பெரியவா.”

லக்ஷ்மிநாராயணன் சிலிர்ப்போடு இந்தச் சம்பவத்தை விவரித்துவிட்டுக் கடைசியாகச் சொன்னார்… ”பெரியவா தன்னடக்கத்தோடு அப்படிச் சொன்னாலும், எனக்கு நன்னாத் தெரியும், அவர் சாட்சாத் ஈஸ்வரனின் அம்சம்!”



Categories: Devotee Experiences

Tags:

1 reply

  1. Thany you.
    Felt Blessed, reading this.
    Thank you.
    Sometime, some how, I wish to type and uploag NUGGETS of Periyava, from his discourses into the web, through your blog. Shall try.
    God Bless.
    anbudan,
    srinivasan.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading